×

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் 5 ஆண்டுகளில் 1,241 பேர் பலி

கோவை: இந்தியாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் 1,241 பேர் உயிரிழந்துள்ளனர். ஐப்பானில் 1871-ம் ஆண்டு முதன்முறையாக இந்த வைரஸ் கிருமி பரவியது. இதனால், இதனை ‘ஜப்பானிய மூளைக்காய்ச்சல்’ என்றும், கிருமியை ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் என்றும் அழைக்கிறார்கள். இந்த வைரஸ், கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இவ்வகை வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வயல், வாய்க்கால் நீர் வரப்பில் இவ்வகை கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை தின்னும் பறவைகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றை கியூலெக்ஸ் கொசுக்கள் கடிப்பதால் கொசுக்களின் உடலில் உள்ள இந்த வைரஸ் வீரியம் அதிகரிக்கிறது. இந்த கொசுக்கள் மனிதனை கடிக்கும்போது, வைரஸ்கள் மனிதனுக்கு தொற்றி ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உருவாகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளில் 5 முதல் 6 குழந்தைகளுக்கு இவ்வகை மூளைக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.

இந்தியாவில், 1973-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் இந்த காய்ச்சலின் பாதிப்பால் மக்கள் முதன்முறையாக அவதிக்கு உள்ளானார்கள். அதன்பிறகு, உத்தரபிரதேசம் மற்றும் பல்வேறு வட மாநிலங்களிலும், தமிழகத்திலும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலும் 5 முதல் 9 வயதுடைய சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த காய்ச்சல் வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களிலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மழை காலத்தில் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

வைரஸ் பாதித்த கொசு கடித்ததில் இருந்து 5 முதல் 15 நாட்களுக்குள் நோயாளிக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. தலைவலி, காய்ச்சல், கழுத்து தசை இறுக்கம், வாந்தி ஆகியவை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள். அடுத்த கட்டமாக மன அழுத்தம், படபடப்பு, உடல் சோர்வு, கைகால் மூட்டுவலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து கவனிக்காமல் விடும்போது பக்கவாதம் ஏற்பட்டு கோமா நிலைக்கு போய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த காய்ச்சலில் இருந்தது தப்பித்தவர்களுக்குப் பின் நாட்களில் பக்கவாதம், வலிப்பு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படவும், சிலருக்குப் பேச்சு வராமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் வேலூர், தஞ்சை மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் 9,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,241 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 569 பேர், உத்தரபிரதேசத்தில் 254 பேர், மேற்கு வங்காளத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 231 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில், அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 642 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 161 பேர் இறந்தனர்.

இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் 235 பேர் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 231 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், கடந்த மாதம் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பினால் தமிழகத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு இல்லை. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 231 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஜப்பானிய மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க பொதுமக்கள் கொசு உற்பத்தியாகுவதை தவிர்க்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மூளைக்காய்ச்சல் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போட வேண்டும்” என்றனர்.

* தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 பேர் பலி
தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மொத்தம் 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 2017ல் 2 பேரும், 2019ல் ஒருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Japanese , Japanese meningitis, 5 years, 1,241 people, killed
× RELATED ஜப்பானிய இயக்குனரின் கடைசி படம் விரைவில் இந்தியாவில் வெளியாகிறது