×

ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு: விஞ்ஞானிகளுக்கு மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: விவசாயப் பொருட்களின் மதிப்புக் கூட்டுதல் மூலம், இந்தியா  தற்போது எதிர்கொண்டுள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூகப் பிரச்னைகளைத்  தீர்ப்பதில் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு கவனம் செலுத்த  வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். அறிவியல்,  தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.  இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இது குறித்து  பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த  கூட்டத்தில் மெய்நிகர் ஆய்வுக் கூடங்களை உருவாக்குவதன் அவசியம்  வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம், நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள  மாணவர்களிடமும் அறிவியலை கொண்டு செல்ல முடியும். அறிவியலை நோக்கி  மாணவர்களை ஈர்த்தல், அடுத்த தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தை மேலும்  வலுப்படுத்துதல் அவசியமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும்  இந்தியர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின்  முன்னேற்றத்திற்கான தேவைகளை நிறைவேற்ற விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.  விவசாயப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், தண்ணீர் சேமிப்பு ஆகியவற்றின்  மூலம் இந்தியா எதிர்கொண்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சமகால சமூகப்  பிரச்னைகளைத் தீர்ப்பதில் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு கவனம்  செலுத்த வேண்டும். தேவையான சில சவால்களாக உருவெடுத்து வரும்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புக்கு 5ஜி, செயற்கை நுண்ணறிவு, குறைந்த  செலவில் நீடித்து உழைக்கும் பேட்டரிகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள  தேவையானவற்றில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். உலகத் தரம் வாய்ந்தப்  பொருட்களை உருவாக்க நவீன அறிவியலையும், பாரம்பரிய அறிவையும் இணைக்க  வேண்டியது இன்றியமையாதது.  புதிய கண்டுபிடிப்புகளை வணிக மயமாக்குதல்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்கு அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக தேர்வு எழுதுங்கள்
சிபிஎஸ்இ  10, +2 தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தனது  டிவிட்டரில், `சிபிஎஸ்இ 10, +2 தேர்வுகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த தேர்வை  எதிர்கொள்ளும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்களுக்கு  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய பல மாத கடின உழைப்பும்,  தயாரிப்பும் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும். எவ்விதமான மன  அழுத்தமும் இல்லாமல், மகிழ்ச்சியாக தேர்வு எழுதும்படி, என் இளைய  நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Tags : scientists ,Modi , Modi appeals to malnutrition, social problems, solution, scientists
× RELATED மாவட்டங்களில் 2,437 பேர் என தொடர்ந்து...