×

பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த சிறுமி உடல் சொந்த ஊரில் அடக்கம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே குக்கிராமத்தில் பாட்டி வீட்டில் வசித்த  இரு சகோதரிகளை (9 வயது, 7 வயது சிறுமிகள்) கடந்தாண்டு அவர்களது உறவினர்கள் சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் இரு சிறுமிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சிறுமிகளின் தாய் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த 16 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் சில மாதங்களில் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி சென்னையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் திண்டிவனம் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சென்னை கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ‘8 பேரை மட்டுமே மூத்த சகோதரி (9வயது சிறுமி) அடையாளம் காட்டினார். தற்போது இறந்த 7வயது சிறுமி, மேலும் 8 குற்றவாளிகளின் பெயர்களை தெள்ளத்தெளிவாக தெரிவித்தார். இதனையடுத்து 16 பேரும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் போக்சோ சட்டத்திற்கான தனி ஏடிஎஸ்பி தலைமையில் வாரம் ஒருமுறை இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார். சிறுமியின்  இறுதி சடங்கில் கலந்து கொண்ட பெண்ணிய செயல்பாட்டாளர் வழக்கறிஞர் லூசியா நிருபர்களிடம் கூறுகையில், ‘போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் காவல்துறை மெத்தனப்போக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுவே குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.

Tags : rape ,rape victim ,hometown ,burial , rape victim, dead girl, body, the hometown, the burial
× RELATED அதிக போதையால் குடந்தை பெண் பலி?