×

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்: குமரியில் மாணவ குற்றவாளிகள் அதிகரிப்பு...பள்ளி, கல்லூரியில் கவுன்சிலிங் மையம் திறக்க கோரிக்கை

தென்தாமரைகுளம்: குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொது இடங்களில் மோதிக் கொள்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நன்றாய் பயிலும் பாலக பருவத்தில் சினிமா மற்றும் மொபைல் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களின் வழியாக கற்றுக்கொள்ளும் சில தேவையற்ற  பழக்கவழக்கங்கள் மூலம் தங்கள் மனதை சிதைத்து பாழாக்கி வீணானவைகளை  சிந்தித்துக்கொண்டு தவறான பாதைகளில் பயணிக்க தொடங்கியிருக்கும் மாணவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவ பருவத்தில் வருகின்ற ஆசைகள் மற்றும் மோகத்தில் நன்றாக படிக்கின்ற மாணவிகளிடம் தங்கள் எண்ணங்களை சொல்ல நினைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை பெருகுகின்ற போதிலும் அவர்களை நிராகரிக்கின்ற மாணவிகளை கொடூரமான முறையில் தாக்குவது  அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆறு மாதத்துக்குள் பல மாணவிகளுக்கு எதிரான வன்முறை தாக்குதல் குமரிமுனையின் தென்தாமரைகுளம் காவல்  நிலையத்துக்குட்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகள் முன்பு நிகழ்ந்துள்ளது. பஸ்  நிறுத்தங்கள், பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் மாணவிகளை கேலி செய்வது பின்தொடர்வது அவர்களிடம் தேவையற்ற செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை  செய்வோரின் எண்ணிக்கையானது மிகவும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கல்லூரி முன்பு மாணவிகள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டும் காவல்துறை மூலம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியது. இந்த நிலை இன்றளவும் தொடர்ந்து கொண்டே வருவது காவல்துறை மற்றும் தொடர்புள்ள கல்வி நிறுவனங்களில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக காவல் நிலையங்களில் பாதுகாப்புக்கு தேவையான அளவு காவலர்கள் இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் செல்லும் பகுதிகள் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள் விடும் நேரங்களில் அவர்களைகண்காணிக்க யாருமில்லாததால் மிக துணிச்சலாக மாணவிகளின் அனுமதியின்றி அவர்களை சிலர் துன்புறுத்துகின்றனர். காவல் நிலையங்களிலுள்ள அதிகாரிகள் அடிக்கடி வேறு இடங்களுக்கு பணிகளுக்கு செல்லவேண்டியிருப்பதால் காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை ஏற்படுகிறது.கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தாக்கப்படுவது என்பது தொடர்கதையாகி விட்டது. மாணவிகளும் பெற்றோர்களுக்கு துரோகம் செய்யாமல்  ஒழுக்கநெறி தவறாமல் வளரவேண்டும்.

சில மாணவிகளின் நடவடிக்கைகளும்  இப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள். சிலர் மாணவர்கள் ஏதாவது தம்மிடம்  கூறினால் பளார் என அவர்களை அறைந்துவிடுகின்றனர். இதனால் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எத்தனையோ உத்தரவுகளை  பிறப்பிக்கின்ற மாவட்ட காவல்துறை மாணவ மாணவிகள் நலன் கருதி கண்காணிப்பு பணியினை துரிதப் படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளை கண்காணிக்க சுழற்சி முறையில் குழுக்களை அமைக்க வேண்டும். மாணவ மாணவிகளுக்கு சிறந்த முறையில் ஆளுமைப் பயிற்சி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் ஆற்றலைக் கற்றுக் கொடுத்து அவர்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கவுன்சலிங்  வைத்து அவர்களின் மன நிலைகளை அறிந்துகொண்டு அவர்களுடைய மனதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஆய்வு செய்து அதற்கான தீர்வை கண்டுபிடித்து அவர்களை நல்வழிப்படுத்தி இனி வருகின்ற தலைமுறை குற்றச் செயல்களைத் தடுக்கின்ற தலைமுறையாக வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாயிருக்கிறது. அரசு இந்த இவ்விஷயத்தில் கால தாமதமின்றி சுறுசுறுப்போடு பணியாற்ற வேண்டுமென்று  அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : student offenders ,Kumari ,counseling center ,school , Questionnaire, Youth, Future, Criminals, Counseling Center
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...