×

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை

ஊட்டி: கோத்தகிரி அருகேயுள்ள கடகோடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நீலகிரி வனப்பகுதியில் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுத்தை, காட்டுமாடு, கரடி மற்றும் காட்டு பன்றி போன்றவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வருகின்றன. இதனால், அடிக்கடி மனித - விலங்கு மோதல் ஏற்படுகிறது.   இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நேற்று கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்விற்குட்படுத்தினர்.

இதில், இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது. கருஞ்சிறுத்தை இறப்புக்குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடக்கோடு பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துள்ளனர். நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில கருஞ்சிறுத்தைகள் மட்டுமே உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பை பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது. சமீப காலமாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மர்மமான முறையில் இறப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kotagiri ,tea estate , Kotagiri, Tea, Black tea
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது