×

சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவலம்

சீர்காழி: சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதியில்லாததால் இறந்தவர் உடலை வயல் வழியாக எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சி மேலத்தெருவில் வசிப்பவர்களுக்கு அதே பகுதியில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.இந்த சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அந்த பகுதியில் இறந்தவர்களை வயல் வழியாக சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்யும் சம்பவம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. சுடுகாட்டிற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது நடந்த கிராமசபை கூட்டத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். மழைக்காலங்களில் அந்த பகுதிகளில் யாரேனும் இறந்தால், நடவு செய்த வயலில் சேற்றில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இறந்தவர் உடலை சேற்றில் எடுத்து செல்லும்போது சடலத்துடன் தடுமாறி விழும் சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி  மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று லட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பாடை கட்டி நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த வயலில் இறங்கி எடுத்து சென்று அப்பகுதி மக்கள் அடக்கம் செய்துள்ளனர். தமிழகம் வளர்ச்சி பாதை நோக்கி செல்கின்றது என குறிப்பிட்டாலும் இதுபோன்று இறந்தவர்களின் உடலை வயல்களில் எடுத்து செல்லும் அவலம் இன்றும் இருந்துதான் வருகிறது. நாகை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருதங்குடி ஊராட்சியில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deceased ,field ,Cemetery , Cemetery
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது