×

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்தவர்கள் ெஜருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவி பெற, விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி அறிவிதுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டை சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ளலாம். 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித ஸ்தலங்களையும் உள்ளடக்கியது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

இதற்கான விண்ணப்ப படிவம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து எந்தவித கட்டணமின்றி பெறலாம். தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறித்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவிகோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கல்சா மஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 28ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 044-25241004 என்ற எண்ணிலும், சிறுபான்மையினர் நல இயக்குநரக அலுவலகத்தை 044-2852003 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Jerusalem ,Collector , Apply for Financial Assistance , Travel to Jerusalem, Collector's Notice
× RELATED தேவாலயங்கள் பழுது பார்க்க நிதி கோரி...