×

24வது வார்டில் தொட்டிகளை அகற்றியதால் தெருக்களில் கொட்டப்படும் குப்பை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 24 வார்டு புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், பாரதிதாசன் நகர், மேட்டூர், புத்தாகரம், மாதனகுப்பம், திருமால் நகர், சரஸ்வதி நகர், சாரதி நகர், செந்தில் நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 24வது வார்டை குப்பை இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என்கிற திட்டத்தின் அடிப்படையில், இப்பகுதியில் இருந்த குப்பை தொட்டிகளை மாநகராட்சி சுகாதார துறையினர் ஓராண்டுக்கு முன்பாக அகற்றியதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் தெருவோரங்களில் நாள்தோறும் கொட்டி வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் குப்பை கழிவுகளும், துர்நாற்றமுமாக உள்ளது. மேலும் இவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அருகில் உள்ள வீடுகளை நோக்கி படையெடுப்பதால் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. தற்போது மாதனகுப்பம் சுங்கச்சாவடியில் இருந்து செல்லும் சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இவற்றை நாய்கள் கிளறி விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

எனவே மாதவரம் மண்டலம் 24வது வார்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலை மற்றும் வார்டு எல்லைக்குட்பட்ட சூரப்பட்டு, புத்தாகரம், சரஸ்வதி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், மீண்டும் அந்தந்த பகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிகளை திடீரென அகற்றிவிட்டனர். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘‘குப்பை இல்லாத பகுதியாக அறிவிக்க பொருட்களை எடுத்துவிட்டோம். எங்கள் துப்புரவு பணியாளர் காலையில் வரும்போது உங்கள் வீட்டு குப்பையை கொடுக்க வேண்டும்’’ என்று கூறுகிறார்கள்.
அதன்படி நாங்கள் எடுத்து வைத்திருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களில் ஊழியர்கள் வருவதில்லை. அதனால் நாங்கள் எங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி விடுகிறோம்’’ என்றனர்.


Tags : streets ,Ward , garbage dumped,streets
× RELATED பஸ் நிலையம் அருகில் குவிந்து கிடக்கும் குப்பை