×

கூவம், அடையாறு நதிகளை மறுசீரமைக்க 5,440 கோடி : பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், கூவம், அடையாறு நதிகள் 5,440 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கூவம் நதியில் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.  அடுத்தகட்டத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும் கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் 5,439.76 கோடி செலவில் அரசு மறுசீரமைக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், நதிகளில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்கும் திட்டத்திற்காக அரசு ஏற்கனவே 1,001 கோடி அனுமதி வழங்கியுள்ளது.  ஒட்டுமொத்த செலவினத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் கட்டுமானத்திற்கான 3,339.90 கோடி அடங்கும்.  

* 2020-21ம் நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  6,754.30 கோடியும் நிதி பகிர்வாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2020-21ம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்து பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில், அவர்களுக்கான 8,803 வீடுகள் உட்பட 20,000 வீடுகளும் கட்டித் தரப்படும்.
* முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், சூரியஒளி தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000, வீட்டின் கட்டுமான செலவிற்கான தொகையுடன் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடொன்றுக்கு 2.1 லட்சமாக உயர்த்தப்படும்.
* 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்திற்காக 3,099.07 கோடியும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக 500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக 375 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில், ஊராட்சி ஒன்றிய, கிராமப்புறச் சாலைகளை தரம் உயர்த்தி பராமரிப்பதற்காக 1,400 கோடி செலவு செய்யப்படும்.
* ‘திறன்மிகு நகரங்கள்’ திட்டத்திற்காக 1,650 கோடியும், அம்ருத் திட்டத்திற்காக 1,450 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
* ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இத்திட்டத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஒப்புதலை விரைவில் எதிர்நோக்கி, 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்திற்கு 750 கோடி, சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு 500 கோடி உட்பட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி  மலை பகுதிகளில், புலிகள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பேணுவதில் மாநில  அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, 2014ம் ஆண்டில் 229ஆக இருந்த புலிகளின்  எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 264ஆக அதிகரித்துள்ளது.
*  தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் 2ம்  கட்டப் பணிகள் 2020-21ம் நிதியாண்டில் 920.56 கோடி செலவில்  தொடங்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : rivers ,Budget announcement ,Adyar ,Adyar River , Rs 5,440 crore, reconstruction of Koovam and Adyar River
× RELATED தனியாக வசிக்கும் வங்கி அதிகாரி...