×

தமிழக பட்ஜெட் : தேசிய மந்தநிலையால் தமிழக வளர்ச்சி குறைந்தது

மாநில அரசின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் தொடர்ச்சியாக அதிக அளவில் வருவாயை ஈட்டித் தருகின்றன.  பொருட்கள் மற்றும் சேவை வரிகளை அறிமுகப்படுத்தியதால் மாநில அரசின் வரி விதிப்புத் திறன் ஏற்கனவே சுருக்கப்பட்டுள்ளது.  பொருட்கள் மற்றும் சேவை வரி வலை அமைப்பில் தொடர்ந்து வரும் ஆரம்பகட்ட பிரச்னைகள் மற்றும் இந்த அமைப்பு முறையுடன் இணக்கமாக செயல்படுவதில் மற்ற மாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும்  தேசிய அளவில் நிலவும் பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலை ஆகியவற்றால் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வளர்ச்சி  குறைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் வணிக வரிகளின் ஒட்டுமொத்த வசூல் தொகை 1,02,236.59 கோடி ரூபாயாகவும்,  ஆயத்தீர்வையிலிருந்து கிடைக்கும் வருவாய் 8,133.81 கோடி ரூபாயாகவும், மோட்டார் வாகன வரி வருவாய்  6,897.73 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்துக்கு 100 கோடி
அம்மா உணவக  திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘லாப நோக்கமற்ற’ ஒரு சிறப்பு நோக்கு  முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா உணவகங்களை அதிக அளவில்  பயன்படுத்தி வரும் கட்டுமான பணியாளர்களை கவனத்தில் கொண்டு, அவர்கள்  தங்கும் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு கொண்டு செல்ல  ஏற்பாடுகள் செய்யப்படும்.  அம்மா உணவக திட்டத்திற்காக, ரூ.100 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை ஏன்?
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் மற்றும் நஷ்டங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதன் காரணமாக மாநிலத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசின் ஏழாவது  ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்தியதன் விளைவாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாயில் ஏற்பட்ட தொய்வு போன்ற அனைத்தும், வருவாய்ப் பற்றாக்குறை உயர்ந்து வருவதற்கான காரணங்களாகும். மேலும் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. வளர்ச்சி சார்ந்த செலவினத்திற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைக் கண்டறிவதற்கு, வளர்ச்சி சாராத செலவினத்தின் ஒட்டு மொத்த அளவை கட்டுப்படுத்துகின்ற வழிமுறைகளை ஆராய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.


Tags : Tamil Nadu ,recession , Tamil Nadu Budget, Tamil Nadu Growth
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...