×

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றி துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசினார்.  பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகான், அந்நாட்டு நடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் நேற்று பேசியதாவது: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வாரம் நடைபெறும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சிக்கு துருக்கி ஆதரவாக இருக்கும். காஷ்மீர் பிரச்னையை போராலும், அடக்குமுறையாலும் தீர்க்க முடியாது. நீதி, நியாயம் அடிப்படையில்தான் தீர்க்க முடியும். நமது காஷ்மீர் சகோதர, சகோதரிகள் பல ஆண்டு காலமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒருதலைபட்சமான நடவடிக்கைகளால், அவர்களின் கஷ்டம் இன்னும் மோசமாகியுள்ளது. . காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண துருக்கி எப்போதும் ஆதரவாக இருக்கும். முதலாம் உலகப் போர் காலத்தில் துருக்கியில் நடந்த கலிபோலி போரில் இரு தரப்பிலும் 2 லட்சம் வீரர்கள் பலியாயினர். அதற்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் எந்த வித்தியாசம் இல்லை.

அடக்குமுறைக்கு எதிராக துருக்கி எப்போதும் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபை கூட்டத்திலும், காஷ்மீர் பிரச்னையை எர்டோகான் எழுப்பினார். அப்போதே, ‘காஷ்மீர் விஷயம் உள்நாட்டு விவகாரம், இது குறித்து துருக்கி கூறிய கருத்து வருத்தம் அளிக்கிறது,’ என இந்தியா கூறியிருந்தது. இந்நிலையில், மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானில் எர்டோகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கண்டனம்
எர்டோகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார், ‘‘கருத்து தெரிவிக்கும் முன், காஷ்மீர் நிலவரத்தை, துருக்கி முறையாக புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.



Tags : chancellor talks ,Turkish ,Kashmir ,parliament ,Pakistani , President of Pakistan Parliament, Kashmir and Turkey
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...