×

ஊராட்சி தலைவர் தேர்தலில் 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வேட்பாளர் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.     தமிழகத்தில் மொத்தம் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசை சேர்ந்த தேவியும், அதிமுகவை சேர்ந்த  பிரியதர்ஷினியும் போட்டியிட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் திடீரென பின்னர் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மிகப்பெரும் சர்ச்சை எழுந்ததால், இரண்டு வேட்பாளர்களுமே பதவி ஏற்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மேற்கண்ட தேர்தல் முடிவை எதிர்த்து தேவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்றும், பிரியதர்ஷனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பிரியதர்ஷனி தரப்பில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.     இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “இந்த விவகாரத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது இரண்டு பெட்டிகளின் வாக்குகள் எண்ணி முடிக்காமல் இருந்தது. இதையடுத்து அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதன் பின்னர்தான் பிரியதர்ஷனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என வாதிட்டார்.

இதற்கு தேவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.     இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கிறது. மேலும் பிரியதர்ஷினி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கிற்கு எதிர்மனுதாரரான தேவி பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணைக்கான தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court ,IGC , Panchayat President Election, Certificate of Success, Icort, Supreme Court
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு