×

முதுகுளத்தூர் அருகே கோயில் அருகே வெடிகுண்டு? பட்டாசு என போலீசார் மழுப்பல்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் முனியன் கோயிலில் வரும் 23ம் தேதி மாசி களரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கிராமத்தினர் கோயிலை மராமத்து செய்து வருகின்றனர். கோயில் வெளிப்புறம் உள்ள காலி இடத்தை சுத்தம் செய்யும்போது ஐஸ்கிரீம் டப்பாவில் திரி போட்ட நாட்டு வெடிகுண்டு போன்று ஒன்று கிடந்தது.  இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஆய்வு செய்யும்போது, அந்த டப்பாவில் வெடிமருந்து, சிறிய கற்கள், இரும்பு துகள்கள் அடைக்கப்பட்டு திரி வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு போன்று இருப்பது தெரியவந்தது. ஆனால் போலீசார், பொதுமக்களிடம், ‘இது பட்டாசு’ எனக்கூறி, அதனை தண்ணீரில் போட்டு கரைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோயில் திருவிழாவிற்கு ஐஸ்கிரீம் டப்பாவில் பட்டாசு கொண்டு வந்து வெடிப்பது கிடையாது. அப்படியே பட்டாசுக்காக பயன்படுத்தப்பட்டாலும், இதில் சிறிய கற்கள், இரும்பு துகள்கள் எப்படி இருக்கும்? போலீசார் தொடர் விசாரணை மேற்கொள்ள தொந்தரவு என கருதி பட்டாசு என பொதுமக்களிடம் மழுப்பலாக பதில் கூறி, அதனை தண்ணீரில் கரைத்து விட்டு சென்றுவிட்டனர். கோயில் திருவிழா நடக்க உள்ள நிலையில் வெடிமருந்து டப்பா கிடந்ததால் அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘டப்பாவில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்பட்ட பழைய பட்டாசு, புஸ்வாணத்திற்கு பயன்படுத்தப்படும் மருந்து இருந்தது. அதை தண்ணீரில் கரைத்தவுடன் கரைந்துவிட்டது’’ என்றனர்.

Tags : temple ,Mudukulathur , Mudukulathur, Temple, Bomb, Fireworks
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு