×

அதிபர் டிரம்ப்பின் பயணத்தின்போது இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் துவங்கும் : வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: ‘இந்தியா - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் மக்களிடையே அறிவிக்க உள்ளனர்,’  என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக வருகிற 24ம் தேதி இந்தியா வருகிறார். அதிபரின் மனைவி மெலனியாவும் உடன் வருகிறார். இந்த பயணத்தின்போது இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக பதவியேற்றுள்ள தரன்ஜித் சிங் சந்துக்கு, இந்திய - அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில் வாஷிங்டன்னில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு துணை அமைச்சர் (பொறுப்பு) அலைஸ் ஜி வெல்ஸ் பேசுகையில், ‘‘அமெரிக்க - இந்திய உறவில் முக்கிய மாறுபட்ட புள்ளியை நெருங்குகிறோம். இந்த மாத இறுதியில் அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சந்திக்கின்றனர்.

அப்போது, இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான அறிவிப்பை அவர்கள் அறிவிப்பார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் பேசிய அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ‘இந்தியா-அமெரிக்க நல்லுறவானது இயற்கையாக உருவானது,’ என்றார். அதை நினைவு கூருகிறேன். மேலும், இந்த ஆண்டு அமெரிக்காவில்  வாஜ்பாய் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட 20ம் ஆண்டாகும். அதிபர் டிரம்ப் இந்திய பயணத்தை மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளார்,” என்றார். இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறுகையில், “10 நாட்களில் அமெரிக்க அதிபரின் இந்திய பயணமானது வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்,” என்றார். அதிபர் டிரம்பின் இந்திய வருகையின்போது இந்திய கடற்படைக்கு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வது உட்பட பல்வேறு மிக முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என தெரிகிறது.

அதிபரின் தொலைபேசி பேச்சை கேட்கும் அதிகாரம் ரத்தாகிறது


வெளிநாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் தொலைபேசியில் பேசுவதை மற்ற நிர்வாக அதிகாரிகள் கேட்கும் நடைமுறை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடெனுக்கு எதிராக உக்ரைன் அதிபரை டிரம்ப் தூண்டிவிட்ட விவகாரம் வெடித்தது. இதனால், அவருடைய பதவிக்கே ஆபத்து ஏற்பட்டது. எனவே, வெளிநாட்டு தலைவர்களுடன் அதிபர் பேசுவதை கேட்கும் நடைமுறையை ஒழிக்கப் போவதாக டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார். இது குறித்து வானொலி நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கூறுகையில், “ வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் அதிபராக இருந்த ரிச்சர்டு நிக்சன் பதவி விலகிய இருண்ட நாட்கள் குறித்து சிந்தித்தேன். அந்த இருளானது நீண்ட நாட்கள் நீடித்தது. எனவே, வெளிநாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் தொலைபேசியில் பேசுவதை கேட்பதற்கு மற்ற  நிர்வாக அதிகாரிகளை அனுமதிக்கும் நீண்டகால நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர இருக்கிறேன்,” என்றார். இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியாவுக்கு எரிசக்தி அமெரிக்கா தாராளம்

அதிபர் டிரம்பின் பொருளாதார ஆலோசகர் லார்ரி குட்லோ வெள்ளை மாளிகையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் எரிசக்தியானது அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது பூஜ்ஜியமாக இருந்தது. கடந்தாண்டு இது 80 கோடி டாலரை தாண்டியது. இந்தாண்டு இந்தியாவுக்கான எரிசக்தி ஏற்றுமதி அளவு 100 கோடி டாலராக அதிகரிக்கும். இந்தியாவிற்கு எரிசக்தி தேவை. எங்களிடம் அதிக எரிசக்தி உள்ளது. அதை வழங்குவதற்கான அனைத்து தடைகளையும் அகற்றுவோம். பிரதமர் மோடியை ஒருமுறை சந்தித்தபோது, ‘நீங்கள் எவ்வளவு எரிசக்தி வேண்டும் என்ற எண்ணை கொடுங்கள். நான் அதை பூர்த்தி செய்கிறேன்’ என கூறியிருந்தேன். அதன்படி, இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.

Tags : Trump ,announcement ,trip ,Indo ,US ,White House , President Trump's trip ,new chapter ,Indo-US relationship, White House announcement
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...