×

இந்தியா - போர்ச்சுக்கல் 7 ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி : போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா, 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப்பின் இரு நாடுகள் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தெற்கு ஐரோப்பாவில் உள்ள இந்தியாவின் நட்பு நாடு போர்ச்சுக்கல். கடந்த 15 ஆண்டுகளாக, இரு நாடுகள் இடையேயான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தீவிரவாத வழக்குகளில் சிக்கிய அபு சலேம், மோனிகா பேடி ஆகியோரை போர்ச்சுக்கல் அரசு கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு நாடு கடத்தியது. கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய போர்ச்சுக்கல் அதிபர் இந்தியா வந்தார். பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு போர்ச்சுக்கல் சென்றார். அப்போது, இரு நாடுகள் இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தற்போது, போர்ச்சுக்கல் அதிபர் டிசோசா, 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடியும் அதிபர் டிசோசாவும் சந்தித்து பேசினர். அப்போது முதலீடு, போக்குவரத்து, துறைமுகங்கள், கலாச்சாரம், தொழில் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகிய துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடர்பாக இரு நாடுகள் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களிலும் டிசோசா பயணம் மேற்கொள்கிறார். 


Tags : India - Signing ,Treaty of Portugal 7 ,India ,Portugal , India - Signing , Treaty of Portugal 7
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!