×

தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: 1.1.2020ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது. 23.12.2019 அன்று வரைவு பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 23.12.2019ம் தேதியிலிருந்து 22.1.2020ம் தேதிவரை பெறப்பட்டன. சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில் பெயர் சேர்ப்பதற்காக 14,65,890 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 14,02,464 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பெயர் நீக்குதலுக்காக 1,18,681 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டது. இறப்பு, இடபெயர்ச்சி, இரட்டை பதிவு ஆகிய காரணங்களுக்காக 97,155 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பதிவுகளில் திருத்தம் கோரி 1,78,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,22,817 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,14,790 விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், 90,943 விண்ணப்பங்களுக்கு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அதன்படி, 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் - 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172, பெண் வாக்காளர்கள் - 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497. மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 1,73,337 வாக்காளர்கள் உள்ளனர். 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18-19 வயதுள்ள 5,85,580 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல்களை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் படிவம் 6 சமர்ப்பிக்கலாம். www.nvsp.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் ‘‘Voters Helpline App’’ செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம். இதுவரை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளலாம். தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 180042521950லும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags : voters ,Tamil Nadu , 6.13 crore voters,Tamil Nadu,Final voter list released
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...