×

கோதாவரி-குண்டாறு திட்டம் பட்ஜெட்டில் இல்லை : வர்த்தக சங்கம் அதிருப்தி

சென்னை: கோதாவரி ஆற்றின் உபரி நீரை தமிழக குண்டாறு வரை கொண்டு வரும் திட்டம், மதுரை-தூத்துக்குடி வர்த்தகப் பெருவழிச் சாலை போன்ற திட்டங்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் இடம்பெறாமல் போனது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்ட அறிக்கை: மகாராஷ்டராவில் பாயும் கோதாவரி ஆற்றில் உபரியாக கலக்கும் 1100 டிஎம்சி நீரை காவிரியில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு முகமை கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகியவற்றை ரூ.60 ஆயிரம் கோடி செலவில் இணைப்பதற்காக தயாரித்த வரைவு திட்ட அறிக்கையை தமிழக அரசு பரிசீலித்தது.

இதையடுத்து, கோதாவரியில் இருந்து திருப்பிவிடப்படும் நீரை கல்லணையில் இணைப்பதற்கு பதிலாக மாயனூரில் உள்ள கட்டளை கதவணையில் இணைத்தால் அந்த நீரை வைகை மற்றும் குண்டாறு ஆகியவற்றுக்கு திருப்பிவிட முடியும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மதுரை-தூத்துக்குடி இடையே  தொழில் பெருவழிச் சாலை திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இது பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது போன்ற முக்கிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் விடுபட்டது வருத்தமாக உள்ளது.


Tags : Godavari-Gundaru project, out of budget, trade association dissatisfaction
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்