×

மத்திய அரசின் பட்ஜெட்டைப் போலவே வளர்ச்சிக்கோ, வேலைவாய்ப்புக்கோ வழிவகுக்காத பட்ஜெட் : அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ்  தலைவர்): புதுமையான  அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை.  வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களோ, புதிய தொழிற்சாலைகளுக்கான  அறிவிப்புகளோ இல்லை. கண்துடைப்பு  அறிவிப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றன. ராமதாஸ் ( பாமக நிறுவனர்): வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் கடன் சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது. வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பது தான் இந்த அரசின் சாதனை. தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. தமிழக பொருளாதாரம் திவாலாக்கப்படுவதை இந்த பட்ஜெட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்,  பொதுச்செயலாளர்): வேலைவாய்ப்பிற்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை  மக்களுக்கு நேரடியாக செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக  நிரூபிக்க வேண்டும். திருமாவளவன் ( விசிக தலைவர்):  அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற பட்ஜெட். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சிறப்புக்கூறுகள் திட்ட நிதி முறையாக இந்த ஆண்டும் ஒதுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தத்தில் இது மத்திய அரசின் பட்ஜெட்டைப் போலவே வளர்ச்சிக்கோ, வேலை வாய்ப்புக்கோ வழிவகுக்காத பட்ஜெட். ஜி.கே.வாசன் (தமிழ்  மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்): நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சி, வேளாண்துறைக்கு, உணவு மானியத்துக்கு என பல துறைகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ஒதுக்கியிருக்கும் ₹2,962 கோடி நிதி தமிழகத்தின் ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் நன்மை பயப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்.  டிடிவி தினகரன் (அமமுக பொதுசெயலாளர்):   தமிழக அரசின் கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது. நிதி கேட்பதாக சொல்லிக் கொண்டு அடிக்கடி டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக அமைச்சர்கள் யாருடைய நலனுக்காக இணக்கமாக செயல்பட்டு எதைச் சாதித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தமிமுன் அன்சாரி எம்எல்ஏ (மஜக பொதுச் செயலாளர்):  பள்ளி கல்வித் துறைக்கு கூடுதல் நிதி, மசூதி கள், தேவாலயங்கள் ஆகியன பராமரிப்புக்கான நிதி தலா 5 கோடியாக உயர்வு போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. அதே சமயம்  புதிய வேலை வாய்ப்புக்கான உறுதிகள்    இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஏ.சி.சண்முகம் ( புதிய நீதிக்கட்சி தலைவர்): தமிழகத்தில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க 1,12,876 வீடுகள் கட்டமுடிவு. மகளிர் நலத்திட்டங்களுக்கு 78,796 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். இந்த 2020-21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை வளரும் தமிழகத்தை வளர்ந்த தமிழகமாக உருவாக்கும். கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்ய தலைவர்):  வாரி  பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை என்ற திருக்குறளுடன்  தங்களது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆளுங்கட்சியின் வினை, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின், தமிழ்மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது  போல் உள்ளது.

விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்): வணிகர்களின் நலனுக்கும் வணிகர்களின் வாழ்வுக்கும் எந்த ஒரு ஆதரவு முகாந்திரம் இல்லாமல் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டிருப்பது தமிழக வணிகர்களுக்கு மிகபெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டங்களையும், குடிமராமத்து பணிகளையும் அரசு இன்னும் துரிதமாக செயல்படுத்தி வளர்ச்சித் திட்டங்களுக்கு வழி வகுக்கவேண்டும். இதுபோல் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பெரம்பலூர் நாடாளுமன்ற எம்பி பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சண்முகம் ஆகியோர் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Budget ,does not lead ,growth or employment, similar ,federal budget
× RELATED மத்திய பட்ஜெட்டில் அறிவித்த வேளாண்...