×

நிர்பயா பலாத்கார, கொலை வழக்கு குற்றவாளி வினய் சர்மா மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும், கடந்த 1ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து, தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்.   அதை பரிசீலனை செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரு தினங்களுக்கு முன் நிராகரித்தார். இதை எதிர்த்து, வினய் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும் போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரருக்கு உள்ள பங்கு ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. கருணை மனுவை நிராகரிப்பது தொடர்பான பரிந்துரையில் உள்துறை அமைச்சரும் கையெழுத்திடவில்லை,’ என குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த கருத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் மற்றும் போபண்ணா அமர்வு, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதில், ‘இந்த விவகாரத்தில் குற்றவாளி வினய் சர்மாவின் உடல்நலம் குறித்து அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சான்றிதழிலும் எந்தவித பாதிப்பும் இருப்பதாக குறிப்பிடவில்லை. இதையெல்லாம் அடிப்படையாக கொண்டு தான் அவருடைய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தண்டனையை தனித்தனியாக நிறைவேற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் 20ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

நீதிபதி மயக்கம்

நிர்பயா வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகளில் ஒருவரான பானுமதி, குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று பிற்பகல் விசாரித்த வந்தபோது திடீரென மயக்கமடைந்தார். உடனே, விசாரணையை நிறுத்திய சக நீதிபதிகள், உடனடியாக நீதிபதி பானுமதியை நீதிபதி அறைக்கு வீல்சேரில் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : Vinay Sharma ,Supreme Court Nirbhaya , Nirbhaya rape case,Vinay Sharma ,Supreme Court
× RELATED தஞ்சையில் மேற்குவங்க பெண் பலாத்கார...