×

40 வீரர்கள் பலியானதின் முதலாம் ஆண்டு நினைவு நாள் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் அதிக ஆதாயம் அடைந்தது யார்? : ராகுல் கேள்வியால் சர்ச்சை

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதே நேரம், ‘புல்வாமா தாக்குதலில் அதிக ஆதாயம் அடைந்தது யார்?’ என்ற கேள்வியை எழுப்பி, ராகுல் காந்தி சர்ச்சை ஏற்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம் அமைந்துள்ள பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், புல்வாமா கொடூர தாக்குதல் நடைபெற்றதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வீரர்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘புல்வாமா கொடூர தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டை பாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது,’ என்று கூறியுள்ளார். இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வீரர்களின் தியாகத்தை போற்றி உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘புல்வாமாவில் உயிர்நீத்த 40 வீரர்களை நினைவு கூறும் இந்நாளில், நம்முன் 3 கேள்விகள் எழுகின்றன. 1. புல்வாமா தாக்குதலால் அதிக ஆதாயம் அடைந்தது யார்? 2. இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகள் என்ன? 3. பாதுகாப்பு குறைபாடுகளால் நடந்த இந்த தாக்குதலுக்கு பாஜ அரசில் பொறுப்பேற்றது யார்?’ என கேள்வி எழுப்பி உள்ளார். இதன்மூலம், ராகுல் புதிய சர்ச்சை கிளப்பியுள்ளார். அவருடைய இந்த கருத்து, பாஜ.வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இருகட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. இது, பெரும் சர்ச்சையாகி உள்ளது.

ஓட்டு மட்டும் கேட்டீங்களே... வீரர்களுக்கு என்ன செஞ்சீங்க?

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பதிவில், ‘தீவிரவாத தாக்குதல் நடந்து ஓராண்டாகி விட்ட நிலையில் அதன் விசாரணை அறிக்கை எங்கே? உளவுத்துறை மிகப்பெரிய தோல்வி அடைந்து, பல உயிர்கள் பலியாக காரணமானதற்கு யார் பொறுப்பேற்றார்கள்? மோடியும், பாஜவும் நேரடியாகவே உயிர்தியாகம் செய்த புல்வாமா வீரர்கள் பெயரை சொல்லி ஓட்டு கேட்டனர். ஆனால், நாட்டுக்காக உயிரை தந்த அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு என்ன செய்தீர்கள்?’ என கேள்வி கேட்டுள்ளார்.

தீவிரவாதிகளின் அனுதாபி ராகுல் மீது பாஜ பாய்ச்சல்

ராகுல் காந்தியின் 3 கேள்விகளுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மா ராவ் வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், ‘புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு மரியாதை செலுத்தும் போது, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளின் அறியப்பட்ட அனுதாபி, மத்திய அரசை மட்டுமல்ல, பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து விமர்சிக்கிறார். ராகுல் எப்போதும் உண்மை குற்றவாளியான பாகிஸ்தானை கேள்வி கேட்க மாட்டார். ராகுல் உங்களால் அவமானம்...’ என கூறி உள்ளார்.

Tags : terrorist attack ,Pulwama ,soldiers ,anniversary ,death ,Rahul , Pulwama terrorist attack , first anniversary ,death of 40 soldiers
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...