×

நீட் தேர்வு முறைகேடு வழக்கு தலைமறைவான புரோக்கர் சேலம் கோர்ட்டில் சரண்

சேலம்: நீட் தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்த புரோக்கர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.  நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவரான உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் தேனி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சிலரும் கைதாகினர். அதே போல தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவரான வாணிம்பாடியை சேர்ந்த இர்பானை, அவரது தந்தை டாக்டர் முகமது சபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீரமலை பக்கமுள்ள செல்லம்பட்டியை சேர்ந்த வேதாச்சலம்(60) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்தான்  நீட் தேர்வு மோசடிக்கு முக்கிய புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.

மருந்தாளுனராக இருந்து ஒய்வு பெற்ற வேதாச்சலம், கடந்த 4 மாதங்களாக தலைமறைவான அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.  அவரது 2 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்த போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்து ஓய்வூதியத்தையும் நிறுத்தி வைத்தனர்.
இதையடுத்து வேறுவழியின்றி அவர்  நேற்று சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நீதித்துறை நடுவர் சிவா, சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் சிறையில் நேற்று மாலை அடைக்கப்பட்டார்.
புரோக்கர் வேதாச்சலம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த தகவல் தேனி சிபிசிஐடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்தவாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags : Salem Court ,Sex Scandal Case Charan ,broker , neet abuse case, an underground broker, Salem Court
× RELATED ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம்:...