×

குரூப் 4 பணி நியமனத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணி நியமனங்களுக்கு தடை கோரிய வழக்கில், பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நடராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிஇ பட்டதாரியான நான் அரசு வேலைக்காக பல்வேறு தேர்வுகளை எழுதி வருகிறேன். இதனிடையே குரூப் 4 பணி நிலையில் விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், சர்வேயர், வரைவாளர், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ ஆகிய பணிகளில் 9,351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சியால் கடந்த 2017ல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நான் வெற்றி பெற்றேன். கடந்தாண்டு மார்ச் 26ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். கலந்தாய்வின்போது காலியிடத்திற்கு ஏற்ப எனக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர். அறிவிக்கும்போது இருந்த காலியிடம் அதிகரித்துள்ளது. ஆனால், என்னைப் போன்ற பலரை காத்திருப்பில் வைத்திருந்தனர். ஆனால், பணி வழங்கவில்லை.

 இதனிடையே, கடந்தாண்டு ஜூன் 14ல் 9,398 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வௌியானது. செப். 1ல் எழுத்துத்தேர்வு நடந்தது. தேர்வானவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது. இதில், ஏற்கனவே ஏற்பட்ட காலியிடங்களும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 150 காலியிடங்கள் அதிகரித்துள்ளது.  ஆனாலும் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், புதிய அறிவிப்பின்கீழ் காலியிடம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி 9,398 ஆக இருந்த காலியிடத்தை 9,882 ஆக அதிகரித்துள்ளனர். முந்தைய தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட பலருக்கு பணி வழங்கவில்லை.

எனவே, 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட தேர்வுகளில், வெற்றி ெபற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இதுவரை பணி வழங்காமல் உள்ளவர்களுக்கு உடனடியாக பணி வழங்கவும், எனக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவுக்கு வருவாய்த்துறை செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 13க்கு தள்ளி வைத்தார்.


Tags : Case for Prohibition of Group 4 , Group 4 Task Force, TNPSC Secretary
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...