×

தமிழக அரசு பட்ஜெட்:காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு 700 கோடி ஒதுக்கீடு

235 கோடி செலவில், விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பத்திலும், 150 கோடி செலவில் நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையிலும் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 30 கோடி செலவில் கடலரிப்பு தடுப்புச் சுவர்கள் வரும் ஆண்டில் அமைக்கப்படும். இந்த ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், மீன்வள துறைக்கு 1,229.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2020-21ம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணி துறையால் மேற்கொள்ளப்படும். குடிமராமத்து திட்டத்திற்கென 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காவிரி வடிநில பகுதிகளில் உள்ள கால்வாய்களில், 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லணைக் கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.  2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில், இத்திட்டத்திற்கென ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ₹500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம்7,677 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் முதல்கட்டத்தில், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.  இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதனிலை பணிகளை மேற்கொள்வதற்காக ₹700 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி ₹6,991.89 கோடியாக உள்ளது.

பழங்குடியினர் குடியிருப்பு உட்கட்டமைப்புகளுக்கு 660 ேகாடி
அனைத்து காலநிலைகளுக்குமான வீடுகள், இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சூரியஒளி விளக்கு வசதிகள், வீட்டு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளில் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும் விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, வீட்டு வசதிக்கான 265 கோடி ரூபாய் உட்பட, 660 கோடி ரூபாயில் விரிவானதொரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டத்தில் உணவு பூங்கா
நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல்  சாகுபடி முறை இந்த ஆண்டு 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.  கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20ம் ஆண்டில் 68.35 கோடி சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இத்திட்டமானது 75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் இந்த ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  2020-21ம் நிதி ஆண்டிலும் தமிழ்நாட்டில்  பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.  

இந்த நிதியாண்டில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், ₹218 கோடி செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பூங்காக்கள் 70 கோடி செலவில் நிறுவப்படும்.  2020-21ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் வேளாண்மை துறைக்கு 11,894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

22 ஆயிரம் ஏக்கரில் பொன்னேரியில் தொழில் முனையம்
சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்திற்கும், பங்குதாரர்களின் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

காட்டுப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பின்டெக் சிட்டி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



Tags : Tamil Nadu Government Budget, Cauvery, Guntaru
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...