×

பட்ஜெட் மீது விவாதம் நடத்த 4 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டம்

சென்னை: பட்ஜெட் மீது விவாதம் நடத்த 4 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டு பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் உரையை வாசித்து முடிந்ததும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் (17ம் தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் கூடும். அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும் சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும்.

18ம் தேதி மற்றும் 19ம் தேதியும் பேரவை கூட்டம் நடைபெறும். அன்றைய தினமும், நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடைபெறும். 20ம் தேதி (வியாழன்) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை அளிக்கப்படும். பின்னர் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் 4 நாட்கள் நடைபெறும் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். இந்த 4 நாட்களும் காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் விவாதம் முடிவடைந்ததும், மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஒரு மாதம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். ஆனால், இந்த கூட்டம் தற்போது நடத்தாமல், ஜூன் மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதால், மானிய கோரிக்கை கூட்டம் இப்போது நடத்தப்படவில்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார்.

Tags : council , Budget, council meeting
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...