×

விஹாரி 101, புஜாரா 93 ரன் விளாசல்: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 263 ஆல் அவுட்

ஹாமில்டன்: நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில், இந்தியா லெவன் முதல் இன்னிங்சில் 263 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் இந்தியா லெவன் - நியூசிலாந்து லெவன் மோதும் 3 நாள் ஆட்டம் செடான் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இந்தியா லெவன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். குகலெஜின் வீசிய முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா டக் அவுட்டாகி வெளியேற, அகர்வால் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஷுப்மான் கில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்தியா லெவன் 5 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. ரகானே 18 ரன் எடுத்து நீஷம் பந்துவீச்சில் புரூஸ் வசம் பிடிபட்டார்.  இந்தியா லெவன் 38 ரன்னுக்கு 4வது விக்கெட்டை பறிகொடுத்து திணறிய நிலையில், செதேஷ்வர் புஜாரா - ஹனுமா விஹாரி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 195 ரன் சேர்த்தனர். புஜாரா 93 ரன் (211 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கிப்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கிளீவர் வசம் பிடிபட்டார். அபாரமாக விளையாடி சதம் அடித்த விஹாரி 101 ரன் (182 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஓய்வு பெற்றார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 7 ரன் எடுக்க, சாஹா, அஷ்வின் டக் அவுட்டாகி வெளியேறினர். ஜடேஜா 8 ரன் எடுத்து சோதி பந்துவீச்சில் ஆலன் வசம் பிடிபட்டார்.

இந்தியா லெவன் அணி 78.5 ஓவரில் 263 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. உமேஷ் யாதவ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து லெவன் பந்துவீச்சில் குகலெஜின், ஈஷ் சோதி தலா 3, ஜேக் கிப்சன் 2, நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ம் நாளான இன்று நியூசி. லெவன் முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடுகிறது.


Tags : Vihari 101 ,India ,Pujara ,practice match , Vihari 101, Pujara 93-run thrashing: India 263 all out in practice match
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...