×

திருச்சியை அலறவிடும் துப்பாக்கி கலாசாரம்: தொடரும் கொள்ளை, கொலைகளால் திகிலில் மக்கள்

திருவெறும்பூர்: திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு கடையை அடைக்கும் நேரத்தில் மதுபானம் கேட்டு 2 பேர் தகராறு செய்ததோடு, ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி கடையில் இருந்த பணத்தை எடுக்க சொல்லி மிரட்டி உள்ளனர். பொதுமக்கள் அப்பகுதிக்கு வரவும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து டாஸ்மார்க் சூப்பர்வைசர் முருகதாஸ் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் கார்த்தி, சிலம்பரசன், செந்தில் ஆகியோர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். தொடர்ந்து, போலீசார் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி மீனாட்சிநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்த நிக்கேல் மகன் டைசன் என்ற செபாஸ்டின் டயாஸ் (28), அவரது நண்பர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, ராதாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் முருகன் (29) என்பது தெரியவந்தது.

முருகன் மீது கொலை வழக்கும் மற்றும் இருவர் மீதும் நாங்குநேரியில் நடந்த 4 டாஸ்மாக் கடை கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கடந்த 2ம் தேதி தான் பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தனர். அதன் பின்னர் இருவரும் சென்னைக்கு சென்று அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வழிபறியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அண்ணா வளைவில் உள்ள டாஸ்மாக் கடையில் துப்பாக்கியை மிரட்டி கொள்ளையடிக்க முயற்சித்தனர்.

அப்போது மக்கள் திரண்டதால் தப்பி ஓடியதும், நேற்று தஞ்சாவூர் சென்றுவிட்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தபோது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து ஒரு பிஸ்டல் துப்பாக்கி, 2 ரவுண்ட் புல்லட் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் திருச்சி ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நேற்றிரவு ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். சமீப காலமாக மலைக்கோட்டை மாநகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் காதல், அரசியல் கொலைகள், பெரும் நிறுவனங்களில் கொள்ளை என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

Tags : Gun
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...