×

தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: 1.1.2020ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது. 23.12.2019 அன்று வரைவு பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 23.12.2019ம் தேதியிலிருந்து 22.1.2020ம் தேதிவரை பெறப்பட்டன. அதன்படி, 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் - 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172, பெண் வாக்காளர்கள் - 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497.

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 1,73,337 வாக்காளர்கள் உள்ளனர். 2020ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18-19 வயதுள்ள 5,85,580 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல்களை தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : voters ,Tamil Nadu , Voter list
× RELATED தமிழகத்தில் இன்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை