×

நிர்பயா வழக்கு: கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் நிர்பயா குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதேபோல் ஜனாதிபதிக்கும் கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். இதனால் அவர்களது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூக்கு தண்டனையை ஆயுள் சிறையாக குறைக்க கோரிய கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கறிஞர் ஏ.பி.சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், வினய் சர்மா சிறையில் இருந்தபோது, அவருக்கு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் வினய் சர்மா psychological trauma எனப்படும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் விதிமுறைகளை மீறி வினய் சர்மா தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல் ரீதியான தாக்குதல் மற்றும் சித்திரவதை காரணமாக அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான மருத்துவ பதிவுகள் உள்ளன. மனச்சோர்வு, பதட்டம் காரணமாக தனக்கு மன மற்றும் நடத்தை பிரச்சினைகள் இருப்பதாக வினய் சர்மா தெரிவித்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று, உச்சநீதிமன் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வினய் ஷர்மாவின் உடல்நிலை பற்றிய அறிக்கை அடிப்படையிலேயே கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்விகாரத்தில் ஜனதாபதி எடுத்துள்ள முடிவில் தலையிட எந்த காரணத்தையும் தாங்கள் காணவில்லை என கூறிய நீதிமன்றம், வினய் ஷர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court dismisses Vinay Sharma , Nirbhaya case, mercy petition, Vinay Sharma, Supreme Court
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்