×

குமரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 140 ஏக்கரில் மரங்கள் கருகின

பூதப்பாண்டி: குமரி  மலை பகுதியில் பற்றி எரிந்த காட்டு தீயில் 140 ஏக்கரிலான மரங்கள் காய்ந்து  கருகிவிட்டன. இந்த தீயின் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் படையெடுப்பது  தடுக்கப்பட்டுள்ளதாக கூறும் தொழிலாளர்கள், காடு களில் வன விலங்குகளுக்கான  குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், சீதப்பால்,  மண்ணடி, சாட்டுப்புதூர், தெள்ளாந்தி, கடுக்கரை, காட்டுப்புதூர், திடல்,  ரெத்தினபுரம், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை ஆகியவை மலை பகுதியை  சார்ந்தவையாக இருக்கின்றன. உணவு, குடிநீர் என்று வாழ்வாதார பிரச்னைகள்  ஏற்படுகின்ற போது, இந்த வழியாகத்தான் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட காட்டு  விலங்குகள் ஊருக்குள் படையெடுக்கின்றன. இப்படி ஊருக்குள்  படையெடுக்கும் விலங்குகள் கூட்டத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவது  வாடிக்கையாக நடந்து வருகிறது.

இதே போல் தினசரி அதிகாலை அரசு, தனியார்  பால்வெட்டும் தொழிலில் ஈடுபடுகின்ற சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் இது  ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தற்போது கடும் வெயில்  காரணமாக மலைகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் இல்லை. இதேபோல் கொடிய  வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த காட்டு பகுதிகளுக்கும் தண்ணீர் இல்லாத  சூழ்நிலை உருவாகி இருக்கிறதாம். வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் உணவுதேடி  வரும் யானை கூட்டங்கள், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தற்போது ஊருக்குள்  வரலாம்? என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இது  ஒருபுறம் இருக்க தற்போது காடுகள் அடிக்கடி தீ பற்றி எரிய தொடங்கி  இருக்கிறது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக காடுகளில் பசுமையாக  காணப்பட்ட வேம்பு, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதனால் தீ விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.  

கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ந்து நின்ற மரங்கள் காட்டுத் தீயால்  கொளுந்துவிட்டு எரிந்தன. இதில் வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 100  ஏக்கரிலான மரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாம். இதே போல்  வனத்துறைக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கரில் உள்ள மரங்களும் எரிந்து  சாம்பலாகிவிட்டன. சூறாவளி காற்று காரணமாக இந்த மரங்கள் 2 நாட்களாக  தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்துள்ளன. இதனால் பல கிலோ மீட்டர்  தூரத்துக்கு அனலாக இருந்ததால் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள்  தண்ணீருக்காக ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர்கள்  கூறுகின்றனர்.

கடும் வெயில் காரணமாக குமரி காடுகள் அவ்வப்போது பற்றி  எரிகிறது. இதனால் பல லட்சம் மதிப்பிலான மரங்கள் தீயில் கருகி நாசமாகி  வருகின்றன. ஆகவே காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க இதை ஒரு  காரணமாக தினசரி அதிகாலை வேலைக்கு செல்லும் பால் வெட்டும் தொழிலாளர்கள்  பார்க்கின்றனர். இருப்பினும் குடி தண்ணீரை தேடி விலங்குகள் எப்போது  வேண்டுமானாலும் ஊருக்குள் படையெடுக்கலாம். தீ எரிந்த பகுதிகள்  வழியாக இல்லாமல் வேறு வழியாக கூட விலங்குகள் வர வாய்ப்பு இருக்கிறது.  இல்லையென்றால் மேற்கு தொடச்சி மலை பகுதியில் உள்ள வேறு பகுதிகளுக்கு செல்ல  வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ வன விலங்குகள் ஊருக்குள் வருவதை  தடுக்கும் வகையில் வனத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை  எடுக்க முன்வர வேண்டும்.

அதன்படி வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள  காட்டு பகுதிகளில் உள்ள பெரிய குழிகளில் தண்ணீர் தேக்க வேண்டும் என்பதுதான்  தினசரி அதிகாலை வேலைக்கு செல்லும் 5 ஆயிரம் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த  கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கைக்கு வனத்துறை அதிகாரிகள் செவி சாய்த்தால்  அப்பாவி தொழிலாளர்களின் விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற முடியும்.  வனத்துறை அதிகாரிகள் இது விஷயத்தில் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : forest fire ,area ,Kumari Hills ,Kumari Hills Trees , Wildfire in Kumari Hills Trees were planted on 140 acres
× RELATED கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள்...