×

காண்போரை கண் கலங்க வைக்கும் வீடியோ மண்ணில் வந்த நிலவே... என் மடியில் பூத்த மலரே... 3 ஆண்டுக்கு முன் இறந்த மகளை சந்தித்து பேசிய தாய்

சியோல்: மூன்று ஆண்டுக்கு முன் இறந்த தனது 7 வயது மகளை சந்தித்த தென் கொரிய தாய் பாச மழை பொழிந்து, தொட்டுத் தழுவி உருகும் வீடியோ காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. நிழலையும், நிஜத்தையும் இணைக்கும் விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் நிறைவேற முடியாத இக்கனவு நிறைவேறியிருக்கிறது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, நடக்க சாத்தியமில்லாத விஷயத்தையும் சாத்தியமாக்கும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பான விர்சுவல் தொழில்நுட்பம் எனப்படும் விஆர் சாதனம், நிழலையும், நிஜத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை தியேட்டருக்கு செல்லாமல், இருந்த இடத்திலேயே பெரிய திரையில் சினிமா பார்க்கும் அனுபவத்தையும், கனவுலகில் அடியெடுத்து வைக்கும் ரம்மியமான அனுபவத்தையும் தந்து வந்த இந்த சாதனம், உளவியல் ரீதியாக உணர்வுப்பூர்வமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், தென் கொரியாவை சேர்ந்த ஓர் நிறுவனம், விஆர் தொழில்நுட்பத்தின் மூலம் இறந்தவர்களை சந்திப்பதற்கான ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்தது. இதன் சிறப்பு ஆவணப் படம் ‘ஐ மீட் யு’ என்ற தலைப்பில் தற்போது யூடியூப்பில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தாய் ஜாங் ஜி சங், தனது கண்களில் விஆர் கருவியை அணிந்து, கைகளில் சிறப்பு கிளவுஸ்களுடன், இறந்த தனது மகளை சந்திக்க செல்கிறார். ஜாங் ஜியின் 7 வயது மகள் 3 ஆண்டுக்கு முன் நோய்வாய்ப்பட்டு இறந்தவர். அந்த பாசமிகு மகள், புல்வெளியில் ஓர் மறைவிலிருந்து ‘அம்மா, அம்மா’ என அழைத்தபடி ஓடி வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது குழந்தையை பார்த்ததும் உடைந்து போய் அழுதபடி பேசும் அந்த தாய், சிறப்பு கிளவுஸ் மூலமாக குழந்தையை தொட்டுத் தழுவி ஆனந்தமடைகிறார்.

இதனை பார்வையாளர் பகுதியிலிருந்து குழந்தையின் தந்தையும், சகோதரனும் கண்ணீர் மல்க பார்த்தனர். ஜாங் ஜியின் மகள் நயியாங் உருவம் டிஜிட்டல் முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இறப்பின் நிதர்சனத்தை தாயிடம் கூறும் நயி யாங், இனி கவலைப்படாதீர்கள் என ஆறுதல் சொல்கிறார். மேலும் தனக்கு சோர்வாக இருப்பதாகவும் தூங்கச் செல்வதாகவும் அவர் தாயிடம் விடை பெற்று செல்வதுடன் வீடியோ முடிகிறது.இது குறித்து ஜாங் ஜி கூறுகையில், ‘‘இது நிஜ சொர்க்கமாக கூட இருக்கலாம். நான் என் மகளை சந்தித்தேன். அதே புன்னகையுடன் என் மகள் என்னை அழைத்தாள். அது சிறிது நேர சந்திப்பு என்றாலும், மிக சந்தோஷமான தருணம். நான் எப்போதும் விரும்பும் கனவு நனவாகி உள்ளது,’’ என்றார். அதே சமயம் இதுபோன்ற நிழல் சந்திப்புகள் உளவியல் ரீதியாக பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Tags : land ,floor ,doc ,South Korean , South Korean doc used VR to ‘reunite’ mother with deceased daughter
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!