×

வேப்பனஹள்ளி அருகே மாட்டு கொட்டகையில் தீ; பந்தய காளை கருகி சாவு

வேப்பனஹள்ளி: வேப்பனஹள்ளி அருகே மாட்டு கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் பந்தய காளை உயிரிழந்த நிலையில், காப்பாற்ற முயன்றஇளைஞருடன், கன்றுக்குட்டியும் படுகாயமடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே தரணிசந்திரம்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா(50). விவசாயியான இவர், தனதுவீட்டிற்கு அருகே கொட்டகை போட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.  மேலும், கொட்டகைக்கு அருகிலேயே அறுவடை செய்யப்பட்ட கொள்ளுச் செடிகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை மாடுகளுக்கு தீவனமாக போர் வைத்திருந்தார்.

நேற்று காலை உள்ளூர் பண்டிகையையொட்டி ராஜப்பாவின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் அனைவரும் ஊரின் மையப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டனர். 11 மணியளவில் ராஜப்பாவின் வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். தகவல் அறிந்து கோயிலில் இருந்த ராஜப்பா, அவரது மகன் சக்திவேல்(20) மற்றும் கிராம மக்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால், தீ மளமளவென பரவியதில் வைக்கோல் போர் மற்றும் மாட்டுக்கொட்டகை ஆகியவை கொளுந்து விட்டு எரிந்தது. மாட்டுக்கொட்டகையில் ராஜப்பா வளர்த்து வந்த பந்தயகாளை மற்றும் கன்றுக்குட்டி ஆகியவை கட்டப்பட்டிருந்தன. அவற்றை காப்பாற்ற சக்திவேல் முயன்றபோது, இடது கை முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் கன்றுக்குட்டியை மட்டும் காப்பாற்றிக் கொண்டு வந்தார். பந்தய காளை தீயில் கருகி பலியானது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரியிலிருந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். மேலும், வேப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Veppanahalli ,death , Near Veppanahalli Fire in cow shed; The death of the racing bull
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு