×

கும்பகோணம் அருகே பாழடைந்த வீட்டில் இலவச வேட்டி, சேலைகள் பதுக்கல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாழடைந்த ஓட்டு வீட்டில் இலவச வேட்டி சேலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.1000 மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கியது.

இதில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது போக மீதமிருந்தால் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவிரி, கீழத்தெருவிலுள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் ஆயிரக்கணக்கான வேட்டி, சேலை மூட்டையாக கட்டி, பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த மூட்டைகளை வராண்டாவில் யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் மேற்கூரை பெயர்ந்துள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் வேட்டி புடவைகள் நனைந்து அதனை எலிகள் கடித்தும், சிதறி குப்பை போல் காட்சியளிக்கிறது. ஒரு மாதத்திற்கு மேல் வீணாகி வருவதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வேட்டி சேலையை பதுக்கி வைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் உஷா கூறுகையில், இது சம்பந்தமாக இதுவரை எந்தவிதமான தகவலும் வரவில்லை. உடனே அதனை மீட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags : Kumbakonam ,house , Near Kumbakonam Free in the dilapidated house Hunting and sneaking
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...