×

தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலை 8வது உலக அதிசய பட்டியலில் சேர்க்க குழு உருவாக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வெறும் 5 அடி அஸ்திவாரத்துடன் மிக பிரமாண்டமாக 216 உயர விமான கோபுரத்தை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டி எழுப்பியுள்ளதை உலகமே வியந்து பார்த்து வருகிறது.

இக்கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க தற்போது சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுநரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுமான உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் கல்வெட்டு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தலைமை செயலாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தஞ்சை பெரிய கோயிலை 8வது உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற வைக்க முயற்சி செய்கின்றனர்.

இது குறித்து குழு தலைவர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது: தஞ்சை பெரிய கோயில் நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகிற்கே சொந்தமானது. தமிழர்களின் மிகப்பெரிய அடையாளமாகவும் விளங்கி வருகிறது. இக்கோயிலை 8வது உலக அதிசய பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளோம். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்படப்பட உள்ளன. அதில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் மற்றும் உலக மக்கள் வாக்களிக்க உள்ளனர். இது உலக அதிசய குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அக்குழுவை தஞ்சை பெரியகோயிலுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் 8வது அதிசயம் பட்டியலில் பெரியகோயிலை சேர்க்க முயற்சி எடுப்பதுடன் அதில் முதலாவது அதிசயமாக பெரியகோயிலை அறிவிக்கும் முயற்சியையும் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tanjore Big Temple , Tanjore Big Temple Poll by online to add to the World Wonder List
× RELATED கொரோனா பீதி: தஞ்சை பெரியகோயில் மூடல்