×

கனரக வாகனம் ஓட்டுவதற்கான ‘லைசென்ஸ்’ பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம்: 8ம் வகுப்பு கல்வித்தகுதி நீக்கப்பட்டதை யொட்டி  சேலம் சரகத்தில் கனரக வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன ஓட்டிகளுக்கு எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்குதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இந்த அலுவலகங்களில் புதிய வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் காகித வடிவிலான ஆவணங்களாகவும், ஓட்டுநர் உரிமம் பிளாஸ்டிக் அட்டை வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நவீனப்படுத்தி தற்போது ‘சிப்’ பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது.

மேலும், கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைனில் செலுத்தப்படுகிறது. இதனிடையே, மத்திய மோட்டார் வாகன விதியில் உள்ள 8ம் வகுப்பு கல்வித்தகுதியை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீக்கம் செய்து, கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமம் பெற கல்வித்தகுதி தேவையில்லை என அறிவித்தது. கல்வித்தகுதி நீக்கப்பட்டாலும்,   போக்குவரத்து குறியீடுகள், பயண அட்டவணை சமர்ப்பித்தல், வாகனத்தை ஆய்வு   செய்தல், ஆபத்துக்காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்   குறித்து தெளிவான பயிற்சிகளை ஓட்டுநர்கள் பெற்றிருக்க வேண்டும் என மத்திய   சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவு, தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்றுப்பட்டு வருகிறது.  ஆனாலும் சேலம் சரகத்தில் உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கனரக வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறுவதற்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் கனரக வாகனம் ஓட்டுவதற்கு 5 பேர் முதல் 10 பேர் வரை சைசென்ஸ் ெபற விண்ணப்பம் செய்வார்கள். தற்போது கல்வித்தகுதி நீக்கம் செய்ததால், தினமும் 50 முதல் 100 பேர் வரை கனரக வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெற  விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் கனரக வாகனம் ஓட்டுவதற்கு 8ம் வகுப்பு கல்வி தகுதி நீக்கப்பட்டதால்,ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பது 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கனரக ஓட்ட லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை நவீனப்படுத்தி சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் அட்டையில் வழங்கப்படுகிறது. கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு ஆட்டோ டிரைவர்கள் அதிகளவு விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது, என்றனர்.


Tags : drivers , For heavy driving Increase in license number
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...