×

பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் கருவை கலைக்க அனுமதி

மதுரை: பலாத்காரத்தால் கர்ப்பமான, வலிப்பு நோய் பாதித்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்த ஐகோர்ட் கிளை, டிஎன்ஏவை பாதுகாக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கணவரை இழந்த நான் ஆடு மேய்க்கிறேன். 26 வயதாகும் என் மகள் வலிப்பு நோயால் மனரீதியாக பாதித்து வீட்டிலேயே முடங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன் என் மகளின் வயிறு சற்று வீங்கியிருந்தது. சந்தேகமடைந்து டாக்டர்களிடம் பரிசோதித்தேன். அப்போது என் மகள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. நான் ஆடு மேய்க்க சென்றதை சாதகமாக பயன்படுத்திய பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி என்பவர், என் மகளை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து காசியை கைது செய்தனர். தான் கர்ப்பமானதே தெரியாத நிலையில் என் மகள் உள்ளார். எனவே, என் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ேநற்று பிறப்பித்த உத்தரவு: 24 வார கருவாக வளர்ந்துள்ள நிலையில் அதை கலைக்க அந்தப் பெண் உடல்ரீதியாக தகுதி பெற்றுள்ளதாக டீன் அறிக்கை அளித்துள்ளார். அதன்படி, கருவை கலைக்கலாம். ஆனால், கருவிலுள்ள டிஎன்ஏவை டீன் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags : fetus , Permission to dissolve the fetus of a pregnant woman by force
× RELATED கனிவான வாழ்வு தரும் கருடன்