×

ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு: அதிமுக பிரமுகரின் உறவினர்கள் வீடுகளில் விடிய, விடிய ரெய்டு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பிரமுகரின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், மருத்துவமனை உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அதிமுக ஒன்றியச் செயலாளர். இவரது உறவினர்களான அம்பிளிக்கையை சேர்ந்த நல்லசாமி, நடராஜன், நாட்ராயன், கருப்புச்சாமி ஆகியோரது வீடுகள் மற்றும் வெண்ணெய், நெய் கடைகள், வணிக நிறுவனங்கள், பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றில், வருமான வரித்துறை உதவி கமிஷனர் சாந்தசொரூபன் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியனின் மருமகன் மற்றும் பைபாஸ் ரோட்டில் உள்ள மகளுக்கு சொந்தமான மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. பாலசுப்பிரமணியன் இரண்டு முறை சட்டமன்ற தேர்தலிலும், ஒரு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இவரது மனைவி பழனியம்மாள் நகர்மன்ற தலைவராக இருந்தபோது அனைத்து கான்ட்ராக்ட்களையும் எடுத்து,  ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும், இதனால் உட்கட்சியினரே அதிருப்தியில் இருந்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் இவரது உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் இவர்களே வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : Relatives ,raid ,house ,Admk , Parasitism in the Ottansatram: Relatives of the Prime Minister Houses in the dead of night, dawn Raid
× RELATED திருச்சி மத்திய சிறையில் உள்ள...