×

உ.பி. சட்டப்பேரவை அருகே பரபரப்பு: லக்னோ நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிப்பு: 3 வக்கீல்கள் காயம்

லக்னோ: உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை அருகேயுள்ள நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடித்து 3 வக்கீல்கள் காயம் அடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், கலெக்டர் அலுவலகம் உள்ள கஜ்ரத்கஞ்ஜ் பகுதியில் மாவட்ட செஷன்ஸ்  நீதிமன்றம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள பார் அசோஷியேசன் அலுவலகம் அருகே நேற்று பிற்பகலில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதனால், அப்பகுதியில் இருந்த வக்கீல்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடிப்பில் சிக்கி 3 வக்கீல்கள் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு வெடிக்காமல் கிடந்த மற்ற 3 வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.

 இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இருபிரிவு வக்கீல்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு பிரிவினர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மற்ற வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்து குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். மேலும், குண்டு வைத்த நபர் பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர். எனவே, நீதிமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். லக்னோ பார் அசோசியேஷன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



Tags : UP Bombing ,court ,lawyers ,Lucknow ,Lucknow Court , UP Legislature, bomb blast, 3 lawyers injured
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்