×

ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் : காவல் துறையினர் அலட்சியம்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிகளை பின்பற்றாமல், தொடர்ந்து பைக் ஓட்டி வருவதால் விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு  அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  பெருகி வரும் வாகன விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் பைக் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து இருப்பவரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இவ்வாறு அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து, பெறப்படும் அபராத தொகை நூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி சட்டம் இயற்றப்பட்டது.  இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த சில தினங்களில் போலீசார் ஆங்காங்கே சாலையில் நின்று, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பைக் ஓட்டுநர்களிடம் இருந்து பெருமளவு தொகையை அபராதமாக வசூலித்து வந்தனர்.

இதனால் அபராதத்திற்கு பயந்து பலரும் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டத் தொடங்கினர். தற்போது போலீசார் தங்களது கெடுபிடிகளை சற்று தளர்த்தியுள்ள நிலையில் மீண்டும் பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சாலையில் உலா வருவதை காண முடிகிறது.
குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி செல்கின்றனர். ஏற்கனவே இந்த புறநகர் பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி குறுகிய சாலையாக இருப்பதுடன், கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் பகுதியாகும். கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டதால், போலீசாரின் கெடுபிடி அதிகரித்ததன் விளைவாக, உயிரிழப்புகள் குறைந்திருந்தது. இந்த நிலையில், தற்போது விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களால் உயிரிழப்பு சம்பவம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையை அதிகப்படுத்தி, விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் மற்றும் கடுமையான சட்டம் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் பெருமளவு வருவாய் கிடைப்பதுடன், சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனைக்கு பயந்து வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற முன்வருவர். அத்துடன் ஆண்டுதோறும் வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Motorcyclists ,accidents , Helmet team, two-wheeler, police
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...