×

ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயம்: போதை வாலிபர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள பெரியசீரகாப்பாடியை சேர்ந்தவர் முருகன்(40). தறிப்பட்டறை வைத்துள்ளார். அதே ஊரைச்சேர்ந்த வெங்கடாசலம்(40), அரூரை சேர்ந்த ரமேஷ்(30) ஆகியோர் இந்த தறிப்பட்டறையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ரமேஷ், ஏர்கன் எனப்படும் குருவி சுடும் துப்பாக்கியை எடுத்து வந்தார். குடிபோதையில் இருந்த அவர், என்னிடம் துப்பாக்கி இருக்கிறது என முருகனிடமும், வெங்கடாசலத்திடமும் கூறினார். திடீரென அவர்களை நோக்கி சுட்டார். அதிலிருந்த குண்டு முருகனின் தோள்பட்டையிலும், வெங்கடாசலத்தின் காலிலும் பாய்ந்தது.

வலி தாங்க முடியாமல் கதறிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஏர்கன்னும் பறிமுதல் செய்யப்பட்டது. அரூரை சேர்ந்த ரமேசுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அவரது தாத்தா சுந்தரம் வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட இவர், அதே பகுதியை சேர்ந்த இன்னொரு ரமேஷ் என்பவரிடம் குருவி சுடுவதற்கு என கூறி துப்பாக்கியை வாங்கி வந்துள்ளார். ஆனால் அவர் நண்பர்களை மிரட்ட பயன்படுத்தியபோது, அதிலிருந்து குண்டு வெளியாகியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த ஏர்கன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் தேவை இல்லை என போலீசார் தெரிவித்தனர். இன்னொரு ரமேசிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Air gun , Air gun fired, shot dead, 2 injured, drug paraphernalia, arrested
× RELATED ஆவியின் கனி - 2 சந்தோஷம்