×

காவல் நிலையத்தில் பெட்டி திருடுபோன விவகாரம்: போலீஸ்காரர் கொடுத்த புகார் மீதே நடவடிக்கை எடுக்காத காவல்துறை: வாட்ஸ்அப்பில் கடித நகல் வைரல்

தண்டையார்பேட்டை: காவல் நிலையத்தில் இருந்து பெட்டி திருடுபோனது தொடர்பாக போலீஸ்காரர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது தொடர்பான தகவல் வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி (46). பூக்கடை போக்குவரத்து காவல் பிரிவில்  தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், பூக்கடை காவல் நிலைய காவலர்கள் ஓய்வறையில், கடந்த 6 மாதங்களாக எனக்கு சொந்தமாக இரும்பு பெட்டி வைத்திருந்தேன். அதில் முக்கிய ஆவணங்கள்  உள்ளன.   வாரம் ஒருமுறை இங்கு வந்து ஓய்வெடுத்து செல்வேன். அதுபோல் கடந்த மாதம் வந்தபோது என்னுடைய இரும்பு பெட்டியை காணவில்லை. இதை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார்.  

ஆனால், இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்து தனது பெட்டி திருபோனது சம்பந்தமாக குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்து ஒரு மாதமாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என காவலர் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் நகல் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. காவல் நிலையத்தில் பெட்டி திருடுபோனது தொடர்பாக போலீஸ்காரர் அளித்த புகார் மீதே நடவடிக்கை எடுக்காத போலீசார், பொதுமக்களின் புகார் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Tags : theft ,Petty ,police station , Police Station, Police, Police, WhatsApp
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்