×

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அரசு விளக்கமளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்ததார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர், விசாரித்ததில் புகாரில் முகாந்திரம் இல்லையென தெரிந்ததால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரித்தனர். அப்போது, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம், ‘‘ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே புகாரில் எந்த முகாந்திரமும் இல்லையென்பதால், வழக்கை தொடர்ந்து நடத்த தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளது. அதை ஏற்று இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, ஆரம்பகட்ட விசாரணை என்பதை எவ்வளவு நாட்கள் நடத்தலாம். அதில், யார், யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தலாம் என்பது குறித்து, விரிவாக விளக்கமளிக்குமாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 20க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Rajendra Balaji ,property deportation ,Govt , Minister Rajendrapalaji, property accumulation, litigation, government clarification, order
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்