×

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் ரூ.1 கோடி இழப்பீடு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் விசாரணை

சென்னை : அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பாக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி அவரது தந்தை தாக்கல் செய்த மனு மீது மாநகராட்சி ஆணையர் நேற்று விசாரணை நடத்தினார். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் சென்டர் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுகவினர் வைத்திருந்த பேனர் ஒன்று விழுந்து. இதில், சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தும் சட்டவிரோதமாக பேனர் வைக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து, பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விதிமீறல் பேனர் விவகாரத்தில் கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், பேனர் விழுந்தால் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ரவி ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களில் ரவி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று விபத்து குறித்து விசாரணை நடத்தினார். அதில், தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், முதுநிலை சட்ட அலுவலர் ஜேக்கப் ராஜன் பாபு, பெருங்குடி மண்டல அலுவலர், சுபஸ்ரீயின் தந்தை ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அரசுக்கு அறிக்கை அளிப்பார். இந்த அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு இழப்பீட்டை முடிவு செய்யும்.

Tags : commissioner ,death ,Subasree ,Youth Subhashree , Adhikaru, banner falls, teenager Subasree, death, Rs 1 crore, compensation, corporation commissioner, inquiry
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...