×

அரசுக்கு ரூ.3.97 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: கவர்ச்சி திட்டங்கள் இருக்குமா

சென்னை: தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா என்பது இன்று தெரியவரும். தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது. பட்ஜெட் உரை வாசித்து முடிக்கப்பட்டதும் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவிக்கப்படும்.

அதன்படி 14ம் தேதி பேரவை கூட்டம் முடிந்ததும், மீண்டும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை (5 நாட்கள்) பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை உடனே நடத்தாமல் ஜூன் மாதத்திற்கு பிறகு நடைபெறும் என்று கூறப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசின் கடன், 1 லட்சத்து  18 ஆயிரத்து 610 கோடியாக இருந்தது. இந்த கடன் தற்போது 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாய் அளவு உயர்ந்து, தமிழக அரசு கடனில் தத்தளித்து வருகிறது. 2016ம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2016-2017 ஆண்டு நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அரசுக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி கடன் இருப்பதாக தெரிவித்தார்.

2017-2018ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி கடனில் அரசு மூழ்கியிருப்பது தெரியவந்தது. 2018-19 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அரசின் கடன் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடியாக உயர்ந்தது. 2019-20 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசுக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி கடன் இருந்தது. இப்படி கடந்த பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றது. அதே நேரம் பல்வேறு இலவச திட்டங்களுக்கு பணம் தாராளமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2020-2021ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதில், தமிழக அரசின் கடன் 5 லட்சம் கோடியை நெருங்கி விடும் என்று கணிக்கப்படுகிறது. தமிழக அரசின் நிதி சுமையை குறைக்க புதிய அறிவிப்புகளை தமிழக அரசு இன்று அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் மற்றும் அதைத்தொடந்து நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : government ,Tamil Nadu Budget ,Tamil Nadu , Government, Rs 3.97 lakh crore, debt, Tamil Nadu budget, filing
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...