×

வரைவு வாக்காளர் புதிய பட்டியலுக்கு பின் மாநகராட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

மதுரை:  நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்துவது குறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகே முடிவெடுக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். எனவே, மாநகராட்சி, நகராட்சி பொறுப்புகளுக்கு உள்ளாட்சித்தேர்தல் நடத்தக்கோரி ஆணையத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, 15 நாட்களுக்குள் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், தேர்தல் நடத்துவதற்கான எந்தப் பணிகளும் நடக்கவில்லை. வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். எனவே, உடனடியாக தேர்தல் அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா கார்த்திகேயன், ‘‘இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவில்லை. அநேகமாக பிப்.14ம் தேதி (இன்று) வெளியாகலாம். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே, மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியும். இதற்காக காத்திருக்கிறோம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் முடிந்த பிறகே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும். இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில், 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : election ,draft voters ,State Election Commission , Draft Voter, New List, Municipal Election, State Election Commission, Information
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு