×

தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் ரத்து: பயணிகள் அதிருப்தி

நெல்லை: நெல்லை - தாம்பரம் இடையே வரும் 20ம் தேதி இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்பை, தென்காசி மார்க்கத்தில் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி மார்க்கத்தில் சென்னைக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வெகுகாலமாக இருந்து வந்தது. பயணிகள் சங்கத்தினர் சார்பில் இதற்காக மதுரை கோட்ட அதிகாரிகளை சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வியாழன் தோறும் நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. மறுமார்க்கமாக இந்த ரயில் வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வந்தது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக நெல்லை மேற்கு மாவட்ட பயணிகளும், தென்காசி மாவட்ட மக்களும் இந்த ரயிலை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வாராந்திர சிறப்பு ரயிலில் ‘கூட்டம் இல்லை’ எனக்கூறி இம்மாதம் முதல் ரத்து செய்ய தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 20ம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக 21ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுதினம் நெல்லை வரும் சிறப்பு ரயிலும் கூட்டம் இல்லாததை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, ெதன்காசி மாவட்ட பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். உண்மையில் இந்த ரயிலில் நல்ல கூட்டம் காணப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே இந்த ரயிலின் நேரத்தை மாற்றியதும், வழித்தடத்தை அடிக்கடி மாற்றியதுமே கூட்டம் குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை இந்த வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமை தோறும் நெல்லையில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டது. மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் போய் சேர்ந்தது. இதனால் சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, சங்கரன்கோவில் பகுதி பயணிகள் இதை அதிகளவில் பயன்படுத்தினர்.

மறுமார்க்கமாக கடந்த டிசம்பர் வரை இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த ரயிலை நம்பி சென்னைக்கு செல்வோரும், நெல்லைக்கு வருவோரும் அலுவலகங்களுக்கு கூட எளிதில் செல்ல முடிந்தது. இந்நிலையில் இவ்வாண்டின் தொடக்கத்தில் சிறப்பு ரயிலின் நேரத்தை மாற்றுகிறோம் என கூறி கொண்டு தெற்கு ரயில்வே அதிகாரிகள், நெல்லையில் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு மறுதினம் காலை 11.30 மணிக்கு செல்லுமாறு மாற்றியமைத்தனர். மறுமார்க்கத்திலும் தாம்பரத்தில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு பகல் 12 மணிக்கு வருவதாக மாற்றியமைக்கப்பட்டது.
 இதனால் பயணிகள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது ரயிலை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலை முன்பு போல நேரத்தை மாற்றி, பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இயக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சுவீதா ரயிலாக மாற்ற முயற்சியா?
ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘நெல்லை- தாம்பரம் சிறப்பு ரயிலின் நேரம் முதலில் மாற்றப்பட்டது. பின்னர் அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியில் சென்ற அதன் வழித்தடத்தை மாற்றினர். தெற்கு ரயில்வே திடமற்ற மனோ நிலையிலே இந்த ரயிலை இயக்கியது. நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 12 மணி நேரத்தில் செல்லக்கூடிய ரயில்கள் இருக்கும் சூழலில், இந்த சிறப்பு ரயில் முதலில் 14 மணி நேரம் என்ற கால அவகாசத்தில் இயக்கப்பட்டது. பின்னர் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வர 17 மணி நேரம் ஆனது. மற்ற ரயில்களுக்காக இந்த சிறப்பு ரயில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் கட்டணமும் இந்த ரயிலில் அதிகம். நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு ரூ.400 கட்டணத்தில் செல்ல முடியும். ஆனால் இந்த ரயிலில் கட்டணம் ரூ.495 ஆக உள்ளது. எனவே சிறப்பு ரயிலை கடந்த இரு மாதங்களாக பயணிகள் அதிகம் பயன்படுத்தவில்லை. நெல்லை- அம்பை- தென்காசி- தாம்பரம் வழித்தடத்தில் அலைமோதும் கூட்டத்தை கண்ட ரயில்வே துறையினர், இந்த ரயிலை சுவீதா ரயிலாக மாற்ற திட்டமிடுகின்றனர். இதனால் பயணிகளுக்கும், தெற்கு ரயில்வேக்கும் பாதிப்புகளே அதிகமாகும்’’ என்றார்.

Tags : Southern Railway ,Tambaram ,Cancellation ,nellai - Tambaram Special Train , Southern Railway, nellai - Tambaram Special Train, Cancellation, Passengers Dissatisfaction
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...