முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் உள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் ஊராட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊராட்சி மன்றத் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஜம்மு - காஷ்மீரில் காலியாக உள்ள மொத்தம் 13,000 பஞ்சாயத்து பதவிகளுக்கு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்படி முதற்கட்ட தேர்தல் மார்ச் 5ம் தேதி நடக்கிறது.

இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது. லடாக், யூனியன் பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சைலேந்திர குமார் அறிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்க வகை செய்த 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். வாக்குச் சீட்டு முறையில் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகிய தலைவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: