×

மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

புதுடெல்லி: மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லி உள்ளிட்ட மாநகரங்களில் மானியமில்லாத சிலிண்டர் விலை, உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியாயானது. குடும்பம் ஒன்றுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சிலிண்டர் ஒவ்வொன்றும் சந்தை விலையில் மானியமில்லாமல் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன.

இதற்கான அறிவிப்பை தினமும் 30 லட்சம் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் இண்டேன் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ மானியமில்லாத சிலிண்டரின் விலை டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.50 உயர்த்தப்பட்டு ரூ.858.50 ஆக விலை உள்ளது. சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு புதிய விலையாக ரூ.896 உள்ளது. மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆக ஒரு சிலிண்டரின் விலை உள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதலே நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகிளா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் மற்றும் அல்கா லம்பா உள்ளிட்ட அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். டெல்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், விலை உயர்வு விகிதம் பட்டியலிடப்பட்ட சிலிண்டர் படம் அச்சிடப்பட்ட அட்டையை ஏந்தி, விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Tags : Mahila Congress ,Delhi ,protests , Mahila Congress,protest,LPG,price hike
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...