×

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீ வைப்பதால் கோடைகாலத்திற்கு முன்பே மலைகளில் எரிந்து நாசமாகும் மரங்கள்: சமூக விரோதிகள் அட்டகாசத்தால் திணறும் வனத்துறை

ஆம்பூர்,: திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை காலத்திற்கு முன்பாகவே மலைகளில் உள்ள செடி, கொடி, மரங்கள் சமூக விரோதிகளால் எரிக்கப்பட்டுள்ளதை தடுக்க இயலாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.  மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகம் இன்றைய சூழலில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கவும், அதனால் ஏற்பட கூடிய நன்மையாக மழை வளத்தை பற்றி கூறுகின்றது. ஆனால், இந்த வாசகங்கள் இன்று லாரிகளில் பின்பக்க வாசகங்களில் ஒன்றாக சிலர் மாற்றி வருகின்றனர். தமிழக அரசின் வனத்துறை சார்பாக பல்வேறு வன சரகங்களில் பெரும் நிதி செலவிட்டு சமூக காடுகள் உருவாக்கப்படுகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காடுகளில் மான்கள் அதிக அளவில் வசிக்கின்றன. இவை மட்டுமன்றி அழிவின் விளிம்பில் இருக்கும் சிறுத்தைகள், யானைகள், மலைபாம்புகள், அரிய வகை பறவைகள் ஆகியவையும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மலைகளில் பகல், இரவு பாராது விஷமிகள் தீ வைத்து வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.

குறிப்பாக பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதியாக திகழும் வாணியம்பாடி அடுத்த வெலதிகமணி பெண்டா மலைத்தொடர்களில் அதிக அளவில் மஞ்சம் புல் வகைகள் பரவி கிடக்கின்றன. இந்த பகுதிகளில் விஷமிகள் சிலர் இந்த புல்களில் தீ வைத்து செல்கின்றனர்.
இதனால் மலைகளில் உள்ள பாதி அளவுக்கு செடி, கொடி, மரங்கள் எரிந்து விட்டன. கோடை காலம் துவங்கும் முன்பாகவே வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர் வன சரகங்களில் உள்ள பல்வேறு வன பகுதிகள் விறகு கரிக்காக தீ வைப்பிற்கு ஆட்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் தீ மற்றும் வெப்பத்தால் வன விலங்குகள் காட்டை விட்டு மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பலரது உழைப்பால் உருவான விதைப்பந்துகளின் வாயிலாக தோன்றிய செடிகள், மரக்கன்றுகள் பொசுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி இயற்கையின் செயலால் பறவைகள் மற்றும் காற்றால் பரவிய விதை நாற்றுகள் தீயில் கருகி உள்ளன. பல ஆயிரம் பறவைகள் மற்றும் அபூர்வ பூச்சி இனங்கள் தங்களது வாழ்விடமான காடுகளை இழந்து சுடுகாடான பகுதிகளை கடந்து செல்ல இயலாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளன.

இதுகுறித்து சுற்றுசூழல் ஆர்வலர் கூறுகையில், இயற்கை தந்த கொடையை யாரோ ஓரிருவரின் பொறுப்பற்ற சமூக விரோத செயலால் வனங்கள் நமக்குதரும் நன்மைகள் அழிந்து போகின்றன. தொடர்ந்து மலைப்பகுதிகளில் சமூக விரோதிகள் தீ வைத்து எரிப்பதை சமூக நல அமைப்புகள், இளைஞர்கள், வனத்துறை மற்றும் காவல்துறையினர் ஒரு இணக்க குழுவை உருவாக்கி விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கையை நேசிக்கும் எவரும் இந்த கொடூரங்களை எளிதில் கடந்து விட இயலாது என்றார். எனவே, இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் தீ வைக்கும் சமூக விரோதிகளை தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : mountains ,district ,Tirupattur ,Tirupathur , summer,Tirupathur district, mountains
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...