×

சித்திரை திருவிழா நெருங்குகிறது ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சின்னாபின்னமாகி கிடக்கும் மாசி, சித்திரை வீதிகளின் அவலம் : மக்கள் திகைப்பு

* பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளம் பல்லை காட்டுகிறது
* பேவர்பிளாக்கை அகற்றி, கிரானைட் பதித்து மீண்டும் இடித்த கேலிக்கூத்து

மதுரை: மதுரை சித்திரை திருவிழா நெருங்கும் நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மாசி, சித்திரை வீதிகள் தோண்டி உருக்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாகி கிடக்கின்றன. சித்திரை வீதியில் ஏற்கனவே நன்றாக இருந்த பேவர் பிளாக் தளத்தை அகற்றி, கிரானைட் பதித்து மீண்டும் இடித்து அகற்றிய கேலிக்கூத்தும் அரங்கேறி இருப்பது மக்களுக்கு திகைப்பை உண்டாக்கி உள்ளது.மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் இறுதியில் தொடங்கி, மே 4ல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மறு நாளான மே 5ல் மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்க இருக்கிறது. 4 மாசி வீதிகளிலும் 2 பெரிய தேர்கள் வலம் வரும் என்பதால், அந்த வீதிகள் முன்கூட்டியே சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும். அதேபோல் சித்திரை வீதிகளும் பொலிவூட்டப்படும். ஆனால் திருவிழா நெருங்கி வரும் நிலையில் அந்த வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக தோண்டி உருக்குலைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன.மாசி வீதிகள் பாதாள சாக்கடைக்காக பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்கள் மூடப்படாமல் பல்லை காட்டுகிறது. உடனடியாக பணிகளை முடித்து, பள்ளங்களை மூடி, பலப்படுத்தினால் தான் அந்த வீதிகளில் 2 தேர்களும் பதியாமல் தங்குதடையின்றி இழுத்து செல்ல வசதி ஏற்படும். ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

கோயிலை சுற்றிய 4 சித்திரை வீதிகளிலும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பேவர் பிளாக் பதித்து அழகுபடுத்தப்பட்டது. இது மதுரை நகரில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் வீதியாகும். அதில் பக்தர்கள் காலணி அணியாமலேயே கோயிலை வலம் வந்தனர். இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.15 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு செய்து புது பொலிவூட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7 மாதங்களுக்கு முன் 4 வீதிகளிலும் பேவர் பிளாக் தளம் இடித்து அகற்றப்பட்டது. அதில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் பல மாதங்களாக அந்த வீதிகளில் பக்தர்கள் நடந்து கோயிலை வலம் வர முடியாத நிலை நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின் தற்போது பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு புது பொலிவு காணப்பட்டது.

ஆனால் திடீரென்று மேல சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதிகளில் கிரானைட் கற்கள் இடித்து அகற்றப்பட்டு, மீண்டும் அந்த வீதிகள் கரடு முரடாக்கப்பட்டுள்ளன. இதை கண்ட மக்கள் திகைத்து போயினர். இந்த பணிகள் தொடங்கியது முதல் முடியும் வரை அன்றாடம் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி திருப்தி தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் கிரானைட் தளம் இடித்து பாழாக்கப்பட்டதில் அரசியல் புகுந்து விளையாடிய கேலிக்கூத்து நடந்துள்ளது.அந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ள தோற்றம் சூரியன், நட்சத்திர வடிவங்களில் காட்சி அளிப்பதாக பா.ஜ.வினர் புகார் கூறினார்களாம். இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் இடித்து அகற்றி வீணாக்கப்பட்டுள்ளது.*சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “பொதுமாக ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

ஏற்கனவே நன்றாக இருந்த வீதிகளை தோண்டி, அந்த பணிகளையும் விரைந்து முடிக்காமல் இழுத்தடிக்கிறார்கள். சூரியன், நட்சத்திரம், தாமரை, இரட்டை இலை, கை வடிவங்கள் கிரானைட் டைல்ஸ்களில் தோற்றமளிப்பதை காண முடியும். அது பார்க்கும் கண்ணோட்டத்தை பொருத்தது. சூரியன் தினமும் உதித்துக் கொண்டு தான் இருக்கிறது. கோவில் தடாகங்களில் தாமரை பூ மலர்கிறது. இதை அரசியலாக பார்ப்பதும், இதற்காக சித்திரை வீதிகளில் கிரானைட் கற்களை இடித்து அகற்றியதும் வேடிக்கையானது” என்றனர்.

Tags : City ,Smart City ,streets ,festival , Smart City, festival ,slums ,muddy ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...