×

காட்சிப்பொருளான குப்பை தரம் பிரிக்கும் குழிகள் பாராக செயல்படும் மண்புழு உரக்கூடம்: அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சேரும் குப்பைகளை பிரிக்கும் பணி முறையாக நடைபெறுவதில்லை. இதனால் மண்புழு உரம் தயாரிப்பதற்காக, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குடில் மற்றும் குழிகள் வீணாகி வருகின்றன.தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அந்தந்த நகராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் வீடுகள் தோறும் குப்பைகளைச் சேகரிக்கும் போது, மக்கும் மக்கா குப்பையை தனியாக சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படி சேகரித்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தனித்தனியாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்காக ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை கொண்டு குப்பைகளைச் சேகரித்து, அதை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனி குழிகளில் கொட்டுவதற்காக, தனிக்குழிகள் தோண்டப்பட்டது. இப்பணியை செய்ய, 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பைகளை பிரித்தெடுத்து அதற்கான குழிகளில் கொட்ட வேண்டும். இவர்களுக்கு தூய்மைக் காவலர்கள் எனப் பெயர். குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு 300 குடும்பங்களுக்கு ஒரு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் தூய்மை காவலர்களுக்கு முதல் 100 நாள் ஊதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்டது.மண்புழு உரம் தயாரிக்க, உரக்குழி அருகில் ஓலைக்கூரையால் வேய்ந்த கட்டிடம் ரூ. 1 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.ஆனால், இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. குப்பைகள் பிரித்து வாங்கப்படாததுடன் தொலைவில் உள்ள இக்கூடத்திற்கு பணியாளர்கள் குப்பைகளை கொண்டு வருவதில்லை.
அத்துடன் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலை, சாலையோரம், கண்மாய் கரைகளில் கொட்டுவதுடன், தீ வைத்தும் எரிக்கின்றனர்.இதனால் இத்திட்டம் செயல்படாமல் முடங்கி கிடப்பதுடன், கிராமம் முழுவதும் குப்பைகள் தேங்கி மண்புழு உரத்தயாரிப்பும் நடைபெறுவதில்லை. இதற்காக அமைக்கப்பட்ட குடில் ஊருக்கு வெளிப்புறத்தில் இருப்பதால் தற்போது அனைத்தும் காட்சிப் பொருளாக உள்ளது. அங்கு இரவு நேரங்களில் மது அருந்தும் சமூகவிரோதிகள் குடில்களை சேதப்படுத்தி வருகன்றனர். எனவே, அரசின் நோக்கம் நிறைவேற சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் முறையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் முத்துக்கனி கூறுகையில், ``தொடக்கத்தில் வேகமெடுத்த இந்த திட்டம் நாளடைவில் வேகம் குறைந்து விட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்க தோண்டப்பட்ட குழிகளில், இதுவரை குப்பைகளை கொண்டு சென்று தரம் பிரித்து கொட்டவில்லை. மண்புழு உரம் தயாரிப்புக்கென கட்டப்பட்ட கட்டிடம், மற்றும் மண்புழு பிரிப்பதற்கான தொட்டிகள் சேதமடைந்து, அந்தந்த பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதற்காக செலவழிக்கப்பட்ட அரசு நிதி அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் வீணாகி வருகிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம், ஊராட்சி தலைவர்களும் முன்வர வேண்டும்’’ என்றார்.இதுகுறித்து முத்துசாமிபுரம் ஊராட்சி செயலர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, `` உரக்கூடம் சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை தரம் பிரிக்க தற்போது புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Tags : Earthworm ,fertilizer ,visual garbage,state funds
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...